ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள 44வயது அகதியான இசா ஆண்ட்ரூவஸ்க்கு கொரோனாவுக்கான சமூக விலகலை பின்பற்றுவது என்பது சாத்தியமற்றதாக இருக்கின்றது. ஜோர்டானிய அகதியான இவர், சிட்னியில் உள்ள வில்லாவுட் தடுப்பு மையத்தில் 400 பேருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“இங்குள்ள அனைவரும் தங்கள் வாழ்க்கைக் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் அச்சத்துடன் இருக்கிறார்கள்,” என எஸ்பிஎஸ் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார் இசா.
இதுபோன்ற கூட்டம் மிகுந்த தடுப்பு முகாமில், உணவு வழங்கும் நேரத்தில் இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமற்றது என்கிறார் இசா. சோப் மற்றும் சானிடைசருக்கும் இங்கு தட்டுப்பாடு உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
விசா காலவதியாகி இருப்பவர்கள், விசா விதிகளை மீறியவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்றவர்கள் என பல வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் வில்லாவுட் தடுப்பு முகாம், யோன்கா ஹில் தடுப்பு முகாம் மற்றும் மந்தரா ஹோட்டலில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அங்குள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
மந்தரா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 66 தஞ்சக்கோரிக்கையாளர்கள், “நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?” என்ற கேள்வியினை போராட்ட பதாகை மூலம் எழுப்பியுள்ளனர்.
பிரிஸ்பேனில் உள்ள கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹக்கீம் கக்கர், தன்னுடன் சுமார் 80 தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார். முன்னதாக, பப்பு நியூ கினியா தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
“ஒருவருக்கொருவர் மூன்று முதல் நான்கு மீட்டர்கள் இடைவெளிவிட்டு இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஆனால் எங்களுக்குள் 1 செ.மீட்டர் இடைவெளி கூட விட முடியவில்லை. உணவு அருந்தும் அறையில் அருகருகே தான் உட்கார வேண்டியிருக்கிறது,” என்கிறார் ஹக்கீம்.
சமீபத்தில், இந்த ஹோட்டலில் இருந்த காவல் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும், தஞ்சக்கோரிக்கையாளர்கள் யாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறுகிறார் ஹக்கீம். காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு கூட சோதனை நடத்தப்படவில்லை எனப்படுகின்றது.
“அனைவரையும் பரிசோதிப்பதற்கான கருவிகள் இல்லை எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய எல்லைப்படை,” எனச் சுட்டிக்காட்டியுள்ளார் ஹக்கீம்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி தோன்றினால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள் எனக் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர்.
“யார் விசாவில் உள்ளார்கள், யார் குடிமகன் இல்லை என்ற பாகுபாடு எல்லாம் வைரசுக்கு தெரியாது,” என எச்சரித்திருக்கிறார் அகதிகளுக்கான மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர் பர்ரி பட்டார்போட்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்
Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment