அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்றவர்களின் நிலை! -
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் சுமார் 7500க்கும் மேற்பட்டவர்களின் அகதி விண்ணப்பங்கள், ஐந்து வருடங்களாக முடிவெடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த சுமார் 30 ஆயிரம் அகதிகளின் மனித உரிமைகள் குறித்த தனது அறிக்கையிலேயே ஆணைக்குழு மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.
குறித்த 30 ஆயிரம் பேரில் 22,280 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 7526 பேரின் விண்ணப்பங்களே இவ்வாறு முடிவெடுக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீண்ட காலமாக அகதி விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கப்படாமலும் வதிவிட உரிமைக்கான விசா அனுமதிகள் வழங்கப்படாமலும் வாழ்ந்துவருகின்ற மக்கள் குறித்து பொதுமக்களின் கரிசனை மிகக்குறைவாக உள்ளது.
இந்த அகதிகளுக்கான அரச உதவிகள் மற்றும் மருத்துவ அனுசரணைகளும்கூட குறைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது விசா நிலை காரணமாக வேலை எடுத்துக்கொள்வதும் கடினமாக இருக்கிறது.
இவர்களிடையே காணப்படும் மொழிப்பிரச்சினையும்கூட தொழில் முனைப்புக்கு தடையாக உள்ளது. இத்தகையதொரு வறிய நிலையில் இந்த அகதிகளின் மன உளைச்சல் மேலும் அதிகமாகியிருக்கின்றது.
இதன் விளைவாக இந்த அகதிகள் தற்கொலை ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் இவ்வாறான ஒன்பது அகதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது இந்த அகதிகளின் நம்பிக்கையீனத்தின் உச்சமாகும்.
ஆனால், குறிப்பிட்ட அகதிகளின் தாய்நாட்டில் நிலவும் சூழல் முன்பைவிட தற்போது மாற்றமடைந்திருப்பதால், இவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக உள்துறை அமைச்சு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்றவர்களின் நிலை! -
Reviewed by Author
on
July 18, 2019
Rating:

No comments:
Post a Comment